நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டு “அநீதி வெளியேற 5 ஆண்டுகள்..” என்ற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து விழிப்புணர்வு கவிதை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் திரைப்பட உலகில் பாடலாசிரியர் வரிசையில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருப்பவர் தான் கவிஞர் வைரமுத்து. சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை 7 முறை பெற்றிருக்கிறார்.
“கலைமாமணி”, “பத்ம ஸ்ரீ” உள்ளிட்ட விருதுகளை வைரமுத்து பெற்றிருந்தாலும், “கவிப்பேரரசு” என்ற தமது தனித்துவமான அடைமொழியால் அறியப்படுகிறார் வைரமுத்து.
கலைஞர்கள் ஒவ்வொருவரும் படைப்பின் மீது தீராத காதல் கொண்டவர்கள். அதே நேரத்தில் கலைஞர்களுக்கு ஒரு விதமான அரசியல் புரிதல் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும். அப்படியான அரசியல் பார்வை கொண்ட கவிஞர் தான் வைரமுத்து அவர்களும்.
கவிப்பேரரசு வைரமுத்து, திமுகவோடும் திராவிட சித்தாந்தத்தோடும் நெருங்கிய தொடர்புகொண்டு உள்ளார். இதன் காரணமாகவே, அவ்வப்போது சமூக பிரச்னைகளைச் சாடி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார். அதன் தொடர்ச்சியாகவே, தற்போது நாளைய தினம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், “வாக்களிக்க வேண்டிய அவசியம்” குறித்து விழிப்புணர்வு கவிதை ஒன்றை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரமுத்து வெளியிட்டு உள்ளார்.
அதன் படி, அந்த கவிதை இப்படியாக தொடங்குகிறது..
விரலில் வைத்த கருப்புமை
நகத்தைவிட்டு வெளியேறச்
சில வாரங்கள் ஆகும்
பிழையான ஆளைத்
தேர்ந்தெடுத்துவிட்டால்
அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்
சரியான நெறியான
வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம்
#Elections2024
என்று, கவிப்பேரரசு வைரமுத்து பதிவிட்டு உள்ளார்.
அதாவது, ‘பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். அதனால், சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என்ற கருத்தை கவிஞர் வைரமுத்து வலியுறுத்தி உள்ளார்.