காலம் தோறும் மனிதர்களின் வாழ்க்கை கருத்தியல் ரீதியாகத்தான் பரிசீலிக்கப்படுகிறது.
இறுதியில் அது ஆன்மீக ரீதியாக ஒரு முடிவுரையை எழுதிப் பார்க்கிறது
மிக சிறந்த உதாரணமான பொன்மொழிகள் சொல்லப்பட்டு விட்டன.
“வாழ்க்கை என்பதே அந்த அந்த நேரத்தின் நியாயங்கள் தான்!” – ஜெயகாந்தன்
வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி போல தோன்றி மறைகிற தற்கணத்தின் இருப்பு சார்ந்த அல்லது மானுட வாழ்வின் உள்ளீடற்ற அபிலாசைகள் சார்ந்தது தான். அதற்குள் கனவுகளும் உண்டு. கற்பனைகளும் உண்டு. அவை நிறைவேற வேண்டும் என்று, அவன் எத்தனிக்கையில் அரசு குடும்பம் இன்ன பிற வகையில் உண்மையாக அவை எவற்றின் மீதும் விருப்பம் இல்லாவிட்டாலும் கூட, அதை எதிர்கொள்ள வேண்டியே அவன் அரசியல் மயமாகிறான்.
அப்படியான நிகழ்வுகள் அல்லது சம்பவங்கள் எவ்வளவு ஊதி பெருக்கப்பட்டாலும், ஒரு பலூன் இறுதியில் வெடித்து விடுவதைப் போலத் தான் என்பதாக அவை அனுமானிக்கப்பட்டு, அது சார்ந்த அனைத்தும் சுருக்கமாகத் தத்துவத்தில் ஏற்கனவே இன்மையாகவும் வெறுமையாகவும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏனெனில், பிறந்தால் இறந்து போவோம் என்கிற அறிவை பெற்ற முதல் உயிரி மனிதன் தான். ஐந்தறிவு உள்ள பிற மிருகங்களுக்கு இந்த உண்மை தெரியாது.
ஆகவே, மனிதன் தன் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே எதையாவது சொல்லிவிட்டு போவதை; அதாவது, தன் இறப்பிற்கு முன் தன்னை நிரூபணம் செய்து கொள்வதை சாகசமாக மேற்கொள்கிறான்.
அதற்காக அவன் கயிற்றின் மீது கழைக்கூத்தாடுகிறான். அதே கயிறு தான், அவனுக்கு சுருக்கிட்டு கொள்ளும் மரண கயிறுமாக ஆகிறது.
கர்ம வினை என்பது இவ்விடத்தில் தான் மனிதன் அறிய முடியாத மர்ம வினை ஆகி முடிகிறது.
இப்போது மனிதன் ஒரு அரசியல் உயிரி என்கிற இடத்தில் கை விலங்கு இடப்படுகிறான்.
என்னை பொருத்தவரையில் பல கோடி ஆண்டுகளாக இந்த உலகம் தோன்றித துலங்கி வந்திருக்கிறது மறைந்தும் புதுப்பித்தும் இந்த பூமி பந்து தன் உயிர் தன்மையைக் காப்பாற்றிக் கொள்கிறது .
இதை ருசுபிக்க மிகச்சிறந்த உன்னத மனிதர்கள் ஆதி முதல் அந்தம் வரை தோன்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் பிறப்பு இறப்பு இருந்தாலும் ஒரு வகையில் காலத்திற்கு அப்பால் அவர்கள் நெடுநாள் நினைவு கூறப்படுகிறார்கள்.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்றான் வள்ளுவன்.
இப்படித் தான் அனைத்திலும் நிறையத் தான் நான் விரும்பினேன். ஆனால், என்னிலும் எப்படியோ நிறைந்து தான் இருக்கிறது வாழ்வு.
ஆனால், சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு..!
– கே. எஸ். இராதாகிருஷ்ணன்