பிரபலமான மும்பை மாடலிங் போட்டோவை வைத்து இன்ஸ்டாவில் காதல் மோசடி அரங்கேறி உள்ள சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோசடி தொடர்பாக போலி இன்ஸ்டா ஐடியை உருவாக்கி பல பெண்களை மயக்கி ஆபாச வீடியோக்களை பெற்று ஏமாற்றி பெரும் மோசடி மன்னனை போலீசார் கைது செய்து உள்ளனர்.
அதாவது, சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏழுகிணறு காவல் நிலையத்திதில் புகார் அளித்தார். அதில், தனது மகளின் இன்ஸ்டா பக்கத்தில் ஒருவர் ஆபாசமாக பேசியும், மிரட்டியும் வந்துள்ளார். அது குறித்து உரிய விசாரணை நடத்தும் படி புகாரில் தெரிவித்து உள்ளார். இந்த புகார் குறித்து ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சென்னை போரூர் பகுதியில் எலக்ட்ரிகல் நிறுவனம் நடத்தி வரும் சகோதரர்கள் ஆனந்த் பாபு தான் இது போல ஈடுபட்டது தெரிந்தது. ஆனந்த் பாபு இன்ஸ்டாகிராம் ஐடியை போலியாக உருவாகி மோசடியை அரங்கேற்றி உள்ளார் என்றும், ஏழுகிணறு போலீசார் சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், மும்பை மாடலிங் ஒருவரை படத்தை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது. ஆனந்த் பாபுவின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா என்பது கண்டுப்படிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். அவரது 2 செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்த போது போலீசாரே அதிர்ந்து போனார்கள்.
அந்த செல்போனில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள், 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆனந்த் பாபுவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
அதன்படி, கைதான ஆனந்த் பாபு, தனது போலி இன்ஸ்டா ஐடியில் மும்பை மாடலிங் ஆன அதர்வா பவார் என்பவரை வைத்து கொண்டு பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். கட்டுடல் ஆணழகனை பார்த்ததும் சில பெண்கள் ஆனந்த் பாபுவை தொடர்பு கொண்டு விடுவார்கள். இதில், பேசிய சில பெண்களை தனது காதல் வலையில் விழவைத்து எமோசனல் பிளாக் மெயில் செய்வதை வழக்கமாக கைதான ஆனந்த் பாபு கொண்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனை வைத்து பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை பெற்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்ஸ்டாவில் தான் அதர்வா பவார் எனக்கூறி ஆள்மாறாட்டம் செய்து பல பெண்களிடம், இது போன்ற உடல் கட்டமைப்பை உனக்காகதான் என உருகி உருகி பேசி ஏமாற்றியுள்ளதும் விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஆனந்த் பாபுவால் பள்ளி, கல்லூரி மாணவிகள் பலரை ஏமாற்றி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி இருப்பது தெரியவந்து உள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை விரித்து ஆனந்த் பாபு பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் மட்டும் எடுத்து சைக்கோ போல செயல்பட்டு வந்ததாகவும் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடவில்லை என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.