சென்னையில் காரில் சென்ற நபரை அரை நிர்வாணமாக்கி விரட்டி விரட்டி தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சென்னை மிண்ட் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் மனைவியுடன் காரில் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே முன்புறம் காரில் சென்ற நபர்கள் நீண்ட நேரமாக வழி விடாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மணிவண்ணன் ஹாரன் அடித்து வழி விடுமாறு கூறியுள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த அவர்கள் மது போதையில் மணிவண்ணனை ஆபாசமாக பேசியும் ,சட்டையை கிழித்தும் விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அத்துடன், இதனைத் தடுக்க முயன்ற போக்குவரத்து காவலர்களை ஒருமையில் பேசியும், வீடியோ எடுத்துக் கொண்டிருந்த செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக மணிவண்ணன் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து காரின் பதிவு எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தான், தாக்குதல் நடத்தியது தொடர்பாக திருவொற்றியூரை சேர்ந்த கோபி, சுடலையாண்டி மற்றும் அவரது மகன் கார்த்திக் ராஜா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில், கோபி ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இதே போல், திருவொற்றியூர் கிழக்கு பகுதி பாஜக பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளராக கார்த்திக் ராஜா இருப்பதும் தற்போது தெரிய வந்து உள்ளது.
இதனையடுத்து, 3 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.