“எனக்கு ஓட்டு இல்லை, ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று, ஓட்டு போட வந்த நடிகர் சூரி வேதனை தெரிவித்து உள்ளார்.
மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினர்.
இவர்களைப் போலவே சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், விஷால், விஜய் ஆண்டனி, அரவிந்த் சாமி, யோகி பாபு, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, ஆண்ட்ரியா, அதிதி, இயக்குனர்கள் சங்கர், வெற்றிமாறன், பா.இரஞ்சித், இசையமைப்பாளர் அனிரூத், ஜி.வி.பிரகாஷ், உள்ளிட்ட பலரும் தங்களது வாக்கை பதிவு செய்தனர். மேலும் பல்வேறு நடிகர், நடிகைகள் உட்பட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாக்கினை செலுத்தினர்.
மற்ற நடிகர்களைப் போலவே, நடிகர் சூரி சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றார். அப்போது, நடிகர் சூரியின் பெயர், வாக்காளர் பெயர் பட்டியிலில் இல்லாமல் இருந்து உள்ளது. இந்த சம்பவத்தால் சூரி கடும் மன வேதனை அடைந்தார்.ஷ
இது குறித்து, அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேதனையுடன் பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ பதிவில், “கடந்த தேர்தலில் நான் தான் வாக்களித்தேன். ஆனால், இந்த முறை என்னால் வாக்களிக்காமல் போனது மன வேதனையாக இருப்பதாக” கூறினார்.
அத்துடன், “யாரால் இந்த தவறு நேர்ந்தது என தெரியவில்லை” என்றும், நடிகர் சூரி மிகவும் சோர்வடைந்த குரலில் பேசினார்.
முக்கியமாக, “ஓட்டு போட முடியாத வேதனையில் நான் கூறுகிறேன் நீங்கள் அனைவரும் ஓட்டு போடுங்கள்” என்றும், அந்த வீடியோவில் சூரி பேசி உள்ளார்.
இதனிடையே, சென்னையில் வாக்களிக்க சென்ற நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் மனமுடைந்த அவர், தனது எக்ஸ் தளத்தில் சோகத்துடன் வீடியோ பேசி வெளியிட்டு உள்ளது, தற்போது வைரலாகி வருகிறது.