கொடூரத்தின் உச்சமாக கணவன் மீது வெந்நீர் ஊற்றி, பால்கனியில் இருந்து மனைவி தள்ளிவிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூர் அருகே இருக்கும் டியோரியாவில் ஆதிஷ் ராய் – அம்ரிதா ராய் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை வந்துக்கொண்டே இருந்தது. இதனால், இவர்களுக்குள் நாளுக்கு நாள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருந்து உள்ளது.
இந்த சண்டைக்கு காரணம், கணவனின் நடத்தை மீது அவரது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. கணவன் மீதான சந்தேகம் நாளுக்கு நாள் முற்றிய நிலையில், சண்டையும் அதற்கு ஏற்றார் போல் முற்றிக்கொண்டே சென்று உள்ளது.
இதனால், அவரது மனைவி கணவனுடன் சண்டை போட்டுவிட்டு தனது அம்மா வீட்டிற்கு கோபித்துக்கொண்டு சென்று உள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியை சமாதானம் செய்ய முயன்ற அந்த கணவன், மனைவியை தேடி மாமியார் வீட்டிற்கு சென்று உள்ளார்.
அங்கு, மனைவியை சந்தித்து சமாதானம் செய்வது போல் பேசிவிட்டு, அங்கேயே தூங்கச் சென்றிருக்கிறார். அப்போது, கணவனின் பேச்சில் திருப்தி அடையாத அவரது மனைவி, அதிகாலை சுமார் 3 மணி அளவில் திடீரென்று எழுந்து, தனது தங்கையை வெந்நீர் வைக்கச் சொல்லி விட்டு கணவனையும் எழுப்பி உள்ளார்.
இதனையடுத்து, அந்த கணவன் தூக்கத்திலிருந்து எழுந்து வந்த நிலையில், அவரது மனைவி சற்றும் எதிர்பாராத நேரத்தில் வெந்நீரை தன் கணவன் மிது ஊற்றி உள்ளார். அதன் தொடர்ச்சியாக அந்த மனைவியின் குடும்பத்தினர் அவரை கடுமையாக தாக்கி உள்ளனர். ஒரு கட்டத்தில், அந்த கணவன் வலியால் அலறித் துடித்து உள்ளார். அப்போது, சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது கணவனை, அவரது மனைவி வீட்டின் பால்கனியில் இருந்து கீழே தள்ளி விட்டு உள்ளார்.
இதில், கீழே விழுந்த அந்த கணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவனை தாக்கி கீழே தள்ளிவிட்ட மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர். இச்சம்வம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.