நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சார வாகனத்தை வழி மறித்த அதிகாரிகளிடம், “Hello ஆபிஸர், உங்க பெயர் என்ன? நீங்க ஒரிஜினலா இல்ல, டூப்ளிகேட்டா? கள்ளக் கடத்தல் வாகனத்தை மறிப்பது போல் மறிக்கிறீங்க?” என்று, மன்சூர் அலிகானின் அட்ராசிட்டி தற்போது வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நாளை மாலை உடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருக்கிறது. இதனால், அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிரமாக இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் தான், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தனக்கு ஒதுக்கப்பட்ட “பலாப்பழம்” சின்னத்தில் தொகுதி முழுவதும், வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, அங்குள்ள கே.வி.குப்பம் அடுத்த சேத்துவண்டை கிராமத்தில் திறந்த வெளி வாகனத்தில் மன்சூர் அலிகான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், மன்சூர் அலிகானின் பிரச்சார வாகனத்தை முந்தி சென்று, திடீரென்று வழி மறித்து நிறுத்தி சோதனையில் ஈடுபட முயன்று உள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத மன்சூர் அலிகான், சற்றே அதிர்ச்சியடைந்த நிலையில்,
“Hello ஆபிஸர், நில்லுங்க.
உங்க பெயர் என்ன?
நீங்கள் ஒரிஜினலா? இல்ல, டூப்ளிகேட்டா?
நீங்க முதல்ல தேர்தல் விதியை கடைப்பிடிங்க. இப்படி பொது மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் போது, வேகமாக வந்து வண்டியை மறித்து நிக்கிறீங்க? நான் என்ன கள்ளக் கடத்தலா பண்ணுகிறேன்? கள்ளக் கடத்தல் காரரின் வாகனத்தை நிறுத்துவது போல வந்து நிறுத்துறீங்க. சோதனை செய்வதற்கு என ஒரு முறை உள்ளது. யார் வேண்டாம் என்றார்கள்? நீங்கள் தாராளமாக வந்து சோதனையிடுங்கள். அதற்காக இப்படி மறிப்பது நியாயமா? இதே போல திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்தின் வாகனத்தை உங்களால் நிறுத்தி சோதனை செய்ய முடியுமா?”
– என அடுத்தடுத்து கேள்விகளாகவே கேட்டிக்கொண்டிருந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத தேர்தல் அதிகாரிகள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது, சோதனையில் ஈடுபட வந்திருந்த அதிகாரிகளை மன்சூர் அலிகான் போட்டோ எடுக்க சொன்னார். உடனடியாக அதிகாரிகள் வாகனத்தை சோதனையிடாமல், புகைப்படம் மட்டும் எடுத்துச் சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது?