Fri. Mar 14th, 2025

“வடலூர் வள்ளலார் பெருவெளியை அழிக்காதீர்” தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்..

By Aruvi May4,2024

“வடலூர் வள்ளலார் பெருவெளியைக் காக்க நடக்கும் அறப்போராட்டத்தை அடக்குமுறைகள் மூலம் முடக்க நினைப்பதா?” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபைப் பெருவெளியை அழித்து, பன்னாட்டு மையக் கட்டுமானங்களை எழுப்பும் தி.மு.க. ஆட்சியின் ஆன்மிகச் சீரழிவு வேலைகளை நிறுத்தக் கோரியும், வடலூர் பெருவெளியை வள்ளலார் ஆன்மிகத்திற்கு ஏற்ப பெருவெளியாகக் காக்கக் கோரியும் 04.05.2024 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் வடலூர் பேருந்து நிலையம் அருகில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று நாம் தமிழர் கட்சி, தமிழ்த்தேசியப் பேரியக்கம், தெய்வத் தமிழ்ப் பேரவை, வீரத்தமிழர் முன்னணி, வள்ளலார் பணியகம், சன்மார்க்க சபைகள் சார்பில் அறிவித்திருந்தோம். முறைப்படி காவல்துறை அனுமதியும் கோரி இருந்தோம்.

கடைசி நேரத்தில் காவல் துறையினர் அனுமதி மறுத்ததுடன் நாம் தமிழர் கட்சி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களை தமிழ்நாடெங்கும் வீட்டுக் காவலில் வைத்தும் சிலரை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று காவலில் வைத்தும் தமிழ்நாடு காவல்துறையினர் எதேச்சாதிகாரம் செய்துள்ளார்கள். இவ்வாறான சனநாயகப் பறிப்பைச் செய்யுமாறு காவல்துறையை ஏவியோர் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களே! என் வீட்டிற்கு முன் காவல் வாகனத்தை நிறுத்திக் கொண்டு என்னைக் கைது செய்ய தயாரானார்கள்.

சேலம் மாவட்டம் – மேச்சேரி – தமிழ் வேத ஆகமப் பாடச்சாலைத் தலைவர் சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்களையும் அவருடன் வடலூர் வந்த ஆண்கள் – பெண்கள் 50 பேரையும் சிதம்பரத்தில் வழிமறித்து கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளார்கள். இதுபோல் பலரையும் ஆங்காங்கே கைது செய்துள்ளார்கள்.

தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் வள்ளலார் பெருவெளி அழிப்பு முரட்டுத்தனத்தையும் சனநாயக வழி ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கும் சர்வாதிகாரத்தையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம், தெய்வத்தமிழ்ப் பேரவை, வீரத்தமிழர் முன்னணி மற்றும் வள்ளலார் சபைகள் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதே ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி வடலூரில் மாபெரும் எழுச்சியுடன் நடத்துவோம்!

உழைப்பு, நிதி, பலவற்றைச் செய்த நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் செலவு செய்து வடலூர் வந்து திரும்பிக் கொண்டிருக்கும் பெருமக்களுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்து உள்ளார்.

By Aruvi

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *